பசியாற்றும் பாரம்பரியம்

ஆசிரியர்: க.ஸ்ரீதர்

Category சமையல்
Publication விகடன் பிரசுரம்
Formatpaper back
Pages 280
ISBN978-81-8476-589-2
Weight350 grams
₹215.00 ₹208.55    You Save ₹6
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பழந்தமிழர் வீரத்துக்கும் உடல் வலிமைக்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் மேற்கொண்ட உணவு முறைகள்தான். சிறுதானியங்கள் பழந்தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தன. அவர்கள் பயிர் வகைகளை நன்செய், புன்செய் என்ற இரு பிரிவுகளாகப் பிரித்துவைத்திருந்தனர். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் நன்செய். மானாவரி அல்லது குறைந்த நீர் தேவையுள்ள பயிர்கள் புன்செய். புன்செய்ப் பயிர்கள்தான் சிறுதானியங்கள். கம்பு, தினை, கேழ்வரகு, வரகு, குதிரைவாலி, சாமை, சோளம், காடைக்கண்ணி, உளுந்து போன்றவை உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அருள்கின்றன. கம்பு உருண்டை, உளுத்தங் களி, கேப்பைக் களி போன்றவை சில சிறுதானிய உணவுகள். கம்பங் கூழ், வரகரிசிச் சோறு, கம்பு தோசை, தேன் கலந்த தினை மாவு போன்றவை முற்காலத்தில் தமிழர்களின் உணவுகள். ஆனால், தற்காலத்தில் சிறுதானியங்களைக் கொண்டு விதவிதமான உணவைச் சமைக்கும் பழக்கம் குன்றிவிட்டது.அரிசியைப் பயன்படுத்தும்போது, அதிலுள்ள உயிர்ச் சத்துகள் பலவிதங்களில் நீக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால், சிறுதானியங்களைப் பயன்படுத்தும்போது அதிலுள்ள உயிர்ச் சத்துகள் காக்கப்படுகின்றன. சிறுதானிய உணவுகள் ஆறு மாதக் குழந்தை முதல் முதியோர் வரை யாவரும் உண்ண உகந்தவை. கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்கள் குருதியில் உள்ள ட்ரைகிளிசிரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு இளைப்பைக் குறைக்க உதவுகின்றன. செரிமானம் எளிதில் நடைபெறுகிறது. இத்தகைய அற்புதங்கள் வாய்ந்த சிறுதானிய உணவுகளே சமுதாயத்தின் இப்போதையத் தேவை. சிறுதானிய உணவுகள் என்றால் கூழாகவோ, கஞ்சியாகவோதான் சாப்பிட வேண்டும். இதில் எந்தச் சுவையும் இல்லை என்ற நிலையை மாற்றி, சிறுதானிய உணவு வகைகளில் மணம் கமழும் சிற்றுண்டி வகைகளை எளிதாகச் சமைத்துச் சாப்பிடலாம் என்ற புதிய வழிகாட்டியை இந்தப் புத்தகத்தின் மூலம் வடித்துள்ளார் நூல் ஆசிரியர் செஃப் க.ஸ்ரீதர். செயற்கை மணமூட்டிகளும் சுவை கூட்டிகளும் இல்லாத உயிர்ச்சத்து நிறைந்த, மனதுக்கு இனிய, மகத்துவம் அளிக்கும் சிறுதானிய உணவு வகைகளை இந்த நூலின் மூலம் தமிழ்ச் சமுதாயத்துக்கு அளித்திருக்கிறார் நூல் ஆசிரியர். பக்கவிளைவுகள் இல்லாத, வயிறைக் கெடுக்காத வகை வகையான சிறுதானிய உணவுகளை அறிய பக்கத்தை புரட்டுங்கள்... நூறாண்டு வாழுங்கள்!

உணவு சார்ந்த கலாசாரம், உணவையே மருந்தாகப் பயன் படுத்திய பாங்கு எல்லாமே தமிழர்களுடைய வாழ்வியல் முறையில்தான் இருக்கிறது. பெரிய புராணம், குறுந்தொகை, நற்றிணை, மலைபடுகடாம் ஆகிய நூல்களை ஆராய்ந்து பார்க்கும்போது உணவு சார்ந்த மிகப் பெரிய ஆய்வு தமிழர்களுடைய சங்க கால இலக்கியங்களில் பரவலாக இருக்கிறது. இப்படியெல்லாம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருந்தது நம் உணவு. அந்த உணவுப் பழக்கவழக்கம் இன்றைக்கு நாகரிகம், கலாசாரம் என்ற பெயர்களில் அவசர காலத்துக்கு ஏற்ப துரித உணவாக மாறிவிட்டது. இந்தத் தகாத உணவுப் பழக்கமே நோய்களுக்கு ஆதாரமாகிவிட்டது. "கூழா..? கேப்பையா..? கஞ்சியா..? உவ்வே !” என்று சிறு குழந்தை முதல் பெரியவர் வரை அதை என்னவோ தீண்டத்தகாத நஞ்சு போல் பார்க்கத் தொடங்கிவிட்டனர். கம்பு, தினை, சாமை, குதிரைவாலி, வரகு இவற்றை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? உணவில் பயன்படுத்தியிருப்போம்? நம் மண்ணுக்கே உரித்தான இந்தத் தானியங்களை மட்டுமா தொலைத்தோம்? கூடவே நம் ஆரோக்கியத்தையும்தானே?

தற்சமயம் மகாபலிபுரத்திலுள்ள இண்டீகோ லீஷர் ஹோட்டலில் பொது மேலாளராக இருக்கிறார். தஞ்சாவூர், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்திலிருந்து ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜியில் டிப்ளமா பட்டயம் பெற்றவர். சிங்கப்பூருக்குச் சென்று பல ஹோட்டல்களில் முக்கிய செஃப்பாகப் பணிபுரிந்தவர். மலேசிய, இந்தோனேசிய மண்டரின் சமையல் வகைகளை சிங்கப்பூரில் நன்கு கற்றவர். சிங்கப்பூர் என்.யூ.எஸ்.' பல்கலைக்கழக விடுதியில் பணிபுரிந்தவர். டோக்கியோ நகரத்தில் நகர அங்கீகாரம் பெற்ற தென்னாட்டு ரெஸ்ட்ரான்ட் ஒன்றை ஆரம்பித்தார். இதுவே நகர அங்கீகாரம் பெற்ற முதல் தென்னாட்டு ரெஸ்ட்ரான்ட். மற்ற ரெஸ்ட்ராண்டுகள் ஜப்பானியர்களின் ருசிக்குத் தகுந்த மாதிரி தயாரிப்பை மாற்றிக்கொண்டனர். ஆனால், இவர் ஜப்பானியர்கள் விரும்பிச் சாப்பிடும்படி சமையலை உயர்த்தினார். தென்னிந்திய, ஃப்ரென்ச், சைனீஸ் உணவைச் சமைப்பதில் கைதேர்ந்தவர். உணவு மேளா பலவற்றை நடத்தியவர். பெரிய அளவில், 7,000 பேருக்கு மேல் சமைத்தவர். டைம்ஸ்நெள தொலைக்காட்சியில் சமையல் ஷோவை நடத்தியவர். சமையல் புத்தகங்கள் பலவற்றை எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமையல் :

விகடன் பிரசுரம் :